சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகவே இன்றளவும் உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டு வருகின்றது.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எந்த திட்டங்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதிமுக அரசின் திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டபூர்வமாக போராடுவோம். அம்மா உணவகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளேன். தொடர்ந்து அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த உணவுகளை வழங்க வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன்.
 
புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மிகவும் அவசரப்படுகின்றது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டுமென நினைக்கின்றனர். அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன்தான் பேசவேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுகவில் அத்துமீறிய செயல்களினால் அதிமுகவின் வெற்றிகள் பல்வேறு இடங்களில் மறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு அதிமுக ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்து இருந்தது. இனியும் அதிமுக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக செயல்பட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்.
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை சரி செய்யும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இரண்டு அரசுகளும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கக்கூடிய சூழல் உள்ளது'' என்று தெரிவித்தார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post