
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கான மெசேஜ் என கூறப்படுகிறது.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ''ஓபிஎஸை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னதாக அவர் எடுத்த நிலைபாடு சசிகலாவை ஆதரிப்பது என்பதுதான். ஆனால், இந்த இரட்டை நிலைபாடு அதிமுகவிற்கு நல்லதல்ல. எதிர்க்கட்சியை தேசிய கட்சி கையில் வைத்திருப்பது தமிழக அரசியலுக்கு உகந்ததல்ல. அதிமுக வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் இருப்பதுதான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது'' என்றார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பேசுகையில், ''ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, சசிகலா விவகாரத்தில் இரண்டுமுறை இந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அமமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறியதாகவுமே பேசப்பட்டது. ஆனால், இன்று ஓபிஎஸ் பேசியிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இதன்மூலம் எடப்பாடியின் கருத்துக்கு எதிராகவும், அவரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கும், ஜெயக்குமாருக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கட்சியில் இது ஒரு விவாதத்தை துவக்கி வைக்கும். இந்த கருத்துக்கு அதிமுகவில் பலரும் ஆதரவாக இருக்கிறார்கள். அதிமுகவுக்குள் இருவேறு கருத்துகள் இருப்பது எல்லோரும் அறிந்ததே. இன்று ஓ.பி.எஸ் துவக்கி வைத்திருக்கும் விவாதம் இனி கட்சியில் முக்கிய பேசுபொருளாக மாறும்'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News