
அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன் செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர், விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம். தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது" எனக் கூறிய அவர் தொடர்ந்து...

"பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் இன்று அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது. அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார்.
பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது. 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கு இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும்.

'அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்' என்று மாற்றிக்காட்ட உழைத்து வருகிறோம்" என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News