
இன்று காலை முதலே நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதற்கிடையில் நனைந்து கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அப்படியான ஒரு பரப்புரையில், வேட்பாளரொருவர் தன் சின்னமான பைனாக்குலரை மக்கள் கையில் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அத்தேர்தலில் மாவட்டத்தின் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,069 பதவிகளுக்கு 5,527 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ராமையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டேவிட் என்பவர், தனக்கு ஒதுக்கப்பட்ட பைனாக்குலர் சின்னத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார்.

டேவிட் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பைனாக்குலர் சின்னத்தை மக்களுக்கு அடையாளப்படுத்தும் விதமாக, பைனாக்குலரை மக்கள் கையில் கொடுத்து அதன் மூலம் அவர்களை ஒரு பொருளைப் பார்க்கச் சொல்லி நூதன முறையில் பரப்புரையில் ஈடுபட்டார். அவரின் இந்த நூதன பிரச்சாரம், பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News