மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான பங்களிப்பாக இருப்பது நாடித் துடிப்பு. அந்த நாடியே இல்லாமல் ஒருவர் உயிர் வாழ்ந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையில் அப்படியான நிகழ்வு 55 வயது கொண்ட கிரேக் லூயிஸ் என்ற நபருக்கு நடந்திருக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டு amyloidosis என்ற தன்னுடன் எதிர்ப்பு சக்தியால் (autoimmune disease)
பாதிக்கப்பட்டதால் கிரேக் லூயிஸுக்கு அசாதாரணமான புரதங்களை உருவாக்கி இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளையும் சேதப்படுத்தியிருந்தது.
இதனால் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மருத்துவர்கள் பில்லி கோன் மற்றும் பட் ஃப்ரேசியர் இருவரும் கிரேக் லூயிஸுக்கான ரத்த ஓட்டத்தை தடுக்காமல் இருக்க பல்ஸ் இல்லாத கருவி ஒன்றை பொருத்த நினைத்தார்கள்.
அதன்படி, அந்த டிவைஸை உருவாக்கியதோடு, அதனை 50 கன்றுகளிடம் சோதித்து பார்த்தார்கள். அதாவது அந்த விலங்குகளின் இதயத்தை நீக்கிவிட்டு அவர்கள் உருவாக்கிய கருவியை பொருத்தி பார்த்ததில் இதயத்துக்கான ரத்தம் செல்லாத போதும் அந்த கன்றுகள் உயிர் வாழ்ந்தன. இதன் மூலம் மருத்துவர்களின் அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் கிரேக் லூயிஸ் உயிர் வாழ சில மணிநேரங்களே இருந்ததால் அந்த டிவைஸை பொருத்த மருத்துவர்களிடம் லூயிஸின் மனைவி லிண்டா சம்மதித்திருக்கிறார். இதனையடுத்து கிரேக் லூயிஸின் உடலில் அந்த கருவியை மருத்துவர்கள் பொருத்தியிருக்கிறார்கள்.
முன்னதாக அவருக்கு டையாலிசிஸ், மூச்சு விடுவதற்கான மிஷின் மற்றும் ரத்த ஓட்டத்துக்கன கருவி என அனைத்தும் லூயிஸுக்கு பொருத்தப்பட்டது. உடலில் இரத்தத்தின் தொடர்ச்சியான ஓட்டத்தை வழங்குவதன் மூலம் இந்த சாதனம் செயல்படுகிறது. அதை நகர்த்துவதற்காக பிளேடுகளும் பயன்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகு லூயிஸை சந்தித்த அவரது மனைவி லிண்டா ஆச்சர்யப்பட்டு போயிருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக லூயிஸின் கிட்னி மற்றும் கல்லீரல் தீவிரமாக பாதிக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மோசமானதோடு அதே 2011ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட ஒரு மாதமாக நாடித் துடிப்பே இல்லாமல் லூயிஸ் உயிர் வாழ்ந்தார் என்றும், ரத்த ஓட்டத்திலும் எந்த இடையூறும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.