'கோயில்களில் யாருக்கும் சிறப்பு மரியாதை வழங்கக் கூடாது' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கோயிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பது, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

சிவகங்கையைச் சேர்ந்த பாலசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ சண்டிவீரன் சுவாமி கோயில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோயில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு ஆண்டும் தை திருவிழாவை முன்னிட்டு கொடிவளவு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது.

image

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை என்பவர் அவருக்கு முதல் மரியாதை செய்யுமாறும், சிறப்பு மரியாதை செய்யுமாறு கூறி வருகிறார். விழாவின் பொழுது கையில் குடையை ஏந்தியவாறு அவரது அடியாட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். பல்வேறு சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் இவ்விழாவில், அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு கோயில் பூசாரிகளை வற்புறுத்தி வருகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே சிங்கம்புணரி மலைக்கோட்டை கிராமத்தில் நடைபெறும் தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, அவரது ஆட்களுடன் பரிவட்டம் கட்டி, கையில் கோலுடன், குடை பிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதோடு, அவ்வாறு கலந்து கொண்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிது அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்த போது பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அவற்றில் ‘கோயிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். கோயிலுக்குள் அனைவரும் சமமானவர்களே’ என அந்த உத்தரவுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவுகள் இந்த வழக்குக்கும் பொருந்தும். இந்த வழக்கிலும் பொருந்தும். கோயிலினுள் யாரும் தங்களது அந்தஸ்தை சிறப்பாக காட்டிக்கொள்ளும் வகையிலான அடையாளங்கள் இருக்கக் கூடாது. சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. விழாவை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post