யார் மீதும் எதையும் திணிக்கக்கூடாது என்பதே திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் சேகர் பாபு

கடவுள் இல்லை என்று போதிப்பது திராவிட மாடல் ஆட்சி கிடையாது. யார் மீதும் எதையும் திணிக்கக்கூடாது என்பதும், அவரவர் வழிபாட்டு முறைக்கு தகுந்த சுதந்திரத்தை அளிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பேசினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் 'தமிழன் வழிபாடு' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் அமைச்சர் சேகர் பாபு பேசியபோது, “நம் வழிபாடு, கல் வழிபாட்டில் தொடங்கி இறைவன் என்ற உருவ வழிபாட்டில் தற்போது உள்ளோம். திராவிட மாடல் என்பது கடவுள் இல்லை என்று மனிதனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைப்பாட்டு என்பது இல்லை. அவரவர் வழிபாட்டு முறைக்கு தகுந்த சுதந்திரத்தை அளிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி.

யார் மீதும் எதையும் திணிக்கக்கூடாது என்பது தான் திராவிட மாடல். அது மொழியாக இருந்தாலும் அப்படிதான். இந்தியை வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. இந்தி திணிப்பைத்தான் வேண்டாம் என்று சொல்கிறோம். கடவுள் இல்லை என்று நாம் உணர்ந்தாலும், அதை பிறருக்கு போதிப்பது இல்லை என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்” என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post