ஓசூர் அருகே மகனை, உறவினரொருவர் கத்தியால் குத்திக் கொன்றதால் சோகத்தில் இருந்த தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஓசூர் அருகேயுள்ள பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அன்னயப்பா (70). இவரது மகன் சேகர் என்ற சென்னப்பா (35), அன்னயப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா. இவரது மகன் விஜய் (25), மருமகள் மது. இவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜய்யின் மனைவி மது, அன்னயப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சென்னப்பா, தனது தந்தையை எப்படி திட்டலாம் என மதுவிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து மது தனது கணவர் விஜய்க்கு தகவல் அளித்துள்ளார். மது போதையில் இருந்த விஜய் தனது நண்பர்களோடு சென்னப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தகராறில் சென்னப்பாவை, விஜய் கத்தியால் குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்த நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்திலே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து சென்னப்பாவின் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பேகேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. தனது மகனை, தம்பியின் மகன் குத்தி கொலை செய்ததால் வேதனையில் இருந்த அன்னயப்பா துக்கம் தாங்காமல் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் முன்பு தந்தை மகன் இருவரது உடல்களையும் மலர்களால் அலங்கரித்த உறவினர்கள் இருவரது உடல்களையும பார்த்து கதறி அழுதனர்.
இது அப்பகுதியில் வாழும் அனைவரையும் கண் கலங்க செய்தது. இதனிடைய கொலையாளி விஜய் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News