`திருக்குறளை சொல்லு... பெட்ரோலை அள்ளு'- பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வித்தியாச முயற்சி!

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம் என மதுவுக்கு எதிராக போராடிவருகிறார் ஒரு பங்க் உரிமையாளர்.

மதுவுக்கு எதிராக பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கரூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான முயற்சியாக திருக்குறளில் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளை மனப்பாடமாக கூறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

மது அருந்துவோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையில் கிடைக்கும் வருவாயே இதுக்கு சாட்சியாக உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாவது அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசும் மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் தனியார் அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் உள்ளிட்டவை மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி மதுவை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

image

இந்நிலையில், கரூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் உரிமையாளர் செங்குட்டுவன் என்பவர் மதுவுக்கு எதிராக நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு திருக்குறளில் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளை மனப்பாடமாக கூறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி வருகிறார்.

பெட்ரோல் பங்க் உரிமையாளரின் இந்த நூதன முயற்சிக்கு பள்ளி கல்லூரி மாணவர்களிடம் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் தொடர்ந்து மாணவ மாணவிகள் பெட்ரோல் பங்கிற்கு வந்து கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.

ஒழுக்கம், பண்பாடு முக்கியம்...

இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன் கூறுகையில், “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பண்பாடு, ஒழுக்கம் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மது அருந்துதல் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கின்ற சூழலில், இளம் வயதினரிடம் மதுவினால் ஏற்படும் தீமைகளையும் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி தொடங்கியுள்ளோம். கடந்த சில வருடங்களாகவே திருவள்ளுவர் தினத்தையொட்டி 3 நாட்களுக்கு இந்த போட்டியை நடத்துவோம்” என்றார்.

image

மதுவினால் பாதிப்பு பெண்களுக்கே...

இதில் கலந்து கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி பாத்திமா தஸ்லின், “மதுவினால் பெண்கள்தான் மிக அதிக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்தேன்” என்றார்.

விழிப்புணர்வு அவசியம்...

காஜாமுகைதீன் என்பவர், “பெட்ரோலுக்காக என்றில்லை... மதுவுக்கு எதிரான இது போன்ற ஒவ்வொரு பிரச்சாரமும் அவசியம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post