ஆத்தூர் அருகே சாலையின் நடுவே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் திமுக பேரூராட்சி மன்ற தலைவரொருவர். அவ்வழியாக சென்ற பேருந்தை நிறுத்திவைத்து, முன்பு நின்று பட்டாசு வெடித்து அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அன்பழகன் (42). இவர் திமுகவில் பெத்த நாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய கழக துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார்.
அப்போது புத்திரகவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பாலத்தின் அடியில் தனது ஆதரவாளர்களுடன் நடு ரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து அவ்வழியே ஆத்தூரில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும்படி நடு வழியில் அவர் நின்று கேக் வெட்டியதாக கூறி விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News