அரசு பேருந்து நடத்துனரின் பணப்பையில் இருந்து பணத்தை திருடிய வாலிபர்

அரசு பேருந்து நடத்துனரின் பணப்பையில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து தர்மடி கொடுத்து காவல்துறையிடம்  ஒப்படைத்தனர்.

சிதம்பரத்திலிருந்து சேலம் செல்லும் அரசு பேருந்து விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட இரவு வந்தது. பயணிகள் இறக்கி விடப்பட்ட நிலையில் நடத்துனர் சுகுமார் (43) பணப்பையை தோளில் மாட்டி இருந்தார். அப்போது பேருந்தின் பக்கவாட்டில் இருந்த லக்கேஜ் டோரை திறந்து பயணிகளின் லக்கேஜை சுகுமார் சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபன் நடத்துனரின் பணப்பையில் இருந்து பயண சீட்டுக்காக வாங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வேகமாக  ஓட்டம் பிடித்தான்.

image
இதனைப் பார்த்த பேருந்து இருக்கையில் இருந்த சக பயணி ஒருவர் பணத்தை திருடிக்கொண்டு ஓடுவதாக கூச்சலிட்டார். உடனே பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பணத்தை திருடி ஓடிய வாலிபரை நீண்ட நேரமாக தேடி மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அடித்த அடியில் தலையில் காயம் ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image
முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் மது போதையில் இருந்ததாகவும், அவர் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்தது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள பேருந்து நிலையத்தில் நடத்துனரின் பணப்பையில் இருந்து பணத்தை எடுத்து  ஓட்டம் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Post a Comment

Previous Post Next Post