போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மருதூர் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் ஜெகதீசன் (41). இவர், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக மேலவாளாடி பகுதியில் உள்ள கே.என்.கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஜெகதீசன், அதே பகுதியில் வசித்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு நேரிலும், பள்ளிக்கு செல்லும் போதும், மாணவியின் செல்போனிலும் ஜெகதீசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த ஜெகதீசனை தேடிவந்தனர். இந்நிலையில் பூவாளூர் பகுதியில் இருந்த அவரை நேற்று மாலை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்ற உத்தரவின் கீழ் லால்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.