மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி- Women's Asia Cup

 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்தை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய மகளிர் அணி.

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். பாகிஸ்தானுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதின.

image

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 55 ரன்களும், கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 47 ரன்களும், ரோட்ரிக்ஸ் 35 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்காளதேச வீராங்கணைகள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 36 ரன்களும், ஃபர்கானா ஹோக் 30 ரன்களும், முர்ஷிதா காதுன் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

image

இறுதியில் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 59  ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  உறுதி செய்தது.

thanks :

puthiyathalaimurai

Post a Comment

Previous Post Next Post