நகைகளை கொடுத்து ஏமாந்த மூதாட்டிகள்!
புதுச்சேரியில் மூதாட்டிகளை திசை திருப்பி அவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிளான 6.5 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி எடுத்து சென்ற மாற்று திறனாளி நபரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவரை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் மதுரை விரைந்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது தாயார் ரங்கநாயகி (72). இவர் கடந்த ஜூலை மாத இறுதியில் நேரு வீதியில் உள்ள நகைகடை உடன் இயங்கி வரும் துணிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மாற்று திறனாளி நபர் ஒருவர் துணி கடையில் ரூ.1000 க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு நகை கடையில் தங்க நாணயம் தருகிறார்கள் என்று கூறியுள்ளார். அத்துடன், ‘நீங்கள் அணிந்திருந்த நகைகளுடன் சென்றால் தங்க நாணயம் தரமாட்டார்கள்’ என அந்த நபர் கூறி மூதாட்டியின் 2.5 சவரன் தங்க நகையை வாங்கி கொண்டு அவரிடம் ஒரு சீட்டை கொடுத்து விட்டு கூட்டத்தில் மறைந்து விட்டார்.
இதே போல் கடந்த 12ஆம் தேதி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு நெல்லித்தோப்பு பகுதியச் சேர்ந்த இந்திராணி (72) என்கிற மூதாட்டி வந்துள்ளார். அப்போது மூதாட்டியிடம் மாற்று திறனாளி நபர் ஒருவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் பிறந்த நாளுக்கு நெல்லித்தோப்பு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாகவும், அதற்கு அந்த மூதாட்டி அணிந்திருக்கும் நகைகளுடன் சென்றால் இலவச நலத்திட்ட உதவிகள் வழங்க மாட்டார்கள் என்றும் நகைகளை தன்னிடம் கழற்றி கொடுத்து விட்டு தான் தரும் சீட்டை கொண்டு நலத்திட்ட பொருடகளை பெற்று கொண்டு பின்னர் தன்னிடமிருந்து நகைகளை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, மூதாட்டி அந்த நபரை நம்பி தான் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். அதன் பின்னர் நகைகளை எடுத்து கொண்டு அந்த மாற்று திறனாளி நபர் மாயமாகி உள்ளார்.
இது தொடர்பாக இரு மூதாட்டிகளும் பெரிய கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவமனை மற்றும் நேரு வீதி துணிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் மூதாட்டிகளை திசை திருப்பி ஏமாற்றி அவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிளான 6.5 சவரன் தங்க நகைகளை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது.
மேலும், அந்த நபர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை தமிழக போலீசாருக்கு புதுச்சேரி போலீசார் அனுப்பி வைத்து தகவல் கேட்டுள்ளார். அப்போதுதான் உண்மையான தகவல்கள் வெளிவந்துள்ளது. சிசிடிவி கேமிராவில் சிக்கிய அந்த நபர் மதுரையை சேர்ந்த சித்திரை வேலு (40) என்றும் மாற்று திறனாளியான அவர் மீது இதே போன்று பல்வேறு வழக்குகள் தென் தமிழகத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தமிழக போலீசாரும் அவரை தேடி வருவதாக தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து புதுச்சேரி போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து சித்திரைவேலுவை பிடிப்பதற்காக மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.