எலும்பு தேய்மான பிரச்னையால் அவதிப்படுபவரா?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு பலவீனமடைந்து உடைதலுக்கு வழிவகுக்கும் நிலை. பொதுவாக இதனை எலும்பு தேய்மானம் என்றும் குறிப்பிடுவர்.50% பெண்களும், 25% ஆண்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பிரச்னையால் அவதிப்படுகின்றனர் என்கிறது ஆய்வுகள். இந்த எலும்பு தேய்மான பிரச்னைக்கான தீர்வு டயட் முறை மற்றும் புகை, மது பழக்கத்துடன் தொடர்புடையது. என்றாலும், சில பானங்கள் எலும்பு தேய்மானத்தை மேலும் அதிகரிக்கும். அவற்றில் சில முக்கியமானவை:

1. ஆல்கஹால்: அதீத ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பழக்கம் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையை அதிகரிக்கிறது. ஒரு வாரத்தில் பெண்கள் 8 கிளாஸ்கள், ஆண்கள் 15 கிளாஸ்கள் வரை மட்டுமே ஆல்கஹால் எடுக்கலாம். அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வது கால்சியம் குறைபாட்டுக்கு வழிவகுக்கும். இது வைட்டமின் டி உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அது ஆஸ்டியோபோரோசிஸ் நிலையை மிகவும் மோசமாக்குகிறது. அதிக ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், மாதவிடாயும் தாமதமாகிறது.

image

2. சோடா: கஃபைன் மற்றும் சாஃப்ட் ட்ரிங்குகளில் போஸ்போரிக் அமிலம் இருக்கிறது. இவை கால்சியம் சத்து உடலில் உறிஞ்சப்படுவதற்கு தடையாக அமைந்து எலும்பு தேய்மானத்தை மேலும் மோசமாக்குகிறது. தினசரி சோடா குடிப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் என்று கூறியிருக்கிறது 2020ஆம் ஆண்டு நியூட்ரியன்ஸ் இதழில் வெளியான ஆய்வு.

3. செறிவூட்டப்பட்ட பால்: செறிவூட்டப்படாத பாலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் முழுமையாக கிடைக்காது. இதனால் இயற்கையாகவே நிறைவான சத்துள்ள பாலை குடிப்பது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வராமல் தடுக்கும். அதேசமயம் செயற்கையாக செறிவூட்டப்பட்ட பாலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் கலந்திருப்பதால அவை எலும்பு தேய்மானம் தவிர பிற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். 

image

4. இனிப்பு கலந்த ஜூஸ்: இனிப்புக் கலந்த ஜூஸ் எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது 2020ஆம் ஆண்டு ஆய்வறிக்கை. மேலும் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு எலும்பு தேய்மான பிரச்னை ஏற்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரையை குறைப்பது, சிறுநீர் வழியாக கால்சியம் மற்றும் மக்னீசியம் வெளியேறாமல் தடுக்கிறது.

இந்த பானங்களை தவிர்த்து கால்சியம் மற்றும் எலும்புகளை வலுவாக்கக்கூடிய ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தினசரி டயட்டில் எடுத்துக்கொள்வது மூட்டுக்களை உறுதியாக்கும். முறையான உணவுகளுடன் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை செய்வதும் எலும்பு தேய்மானத்திலிருந்து காக்கும். அதேசமயம் சில பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்யும்போது அது மேலும் தேய்மானத்தை அதிகரிக்கிறது. எனவே நிபுணர்களின் அறிவுரைப்படி முறையான பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post