ஜெ.வுக்கும் எனக்கும் இடையே உறவு சரியில்லை ? எப்படி தெரியும்


“ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, தான் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. அன்றைய சூழலில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என எய்ம்ஸ் உள்பட அனைத்து மருத்துவர்களும் தெரிவித்தனர்” என்றும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் தான் தலையிட்டதில்லை என சசிகலா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2012ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் தனக்கும் இடையிலான உறவு சரியில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க யார் காரணம், யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

image

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனிமேல் யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

எந்தவிதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த மருந்துகள் தர வேண்டும் என்ற முடிவை மருத்துவக் குழுவினரே எடுத்தனர். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக, எந்த தேவையும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் உள்பட அனைத்து மருத்துவர்களும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக எந்தவித விசாரணை நடத்தினாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

image

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. நாங்கள் நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இது இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன். ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30-11-2021 அன்று `ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

image

நானும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம். அவரே சொல்வது போல நான் அவருக்கொரு உற்ற சகோதரியாக, உயிர்த் தோழியாக, இன்னும் சொல்லபோனால் அவருக்கு தாயாக இருந்து பாதுகாத்து வந்துள்ளேன்.

இடையிடையே என்னையும் அவரையும் எப்படியாவது பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நானும் அவரும் சிறிது காலம் பிரித்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அவரோடு இருந்து வந்தேன். 2012 முதல் அவருக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்?

image

யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன ஜெயலலிதா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன, அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்” என கூறியுள்ளார்.


from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post