
கோவில்பட்டி அருகே திருநங்கைகள் முடியை அறுத்து தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில், இந்த கொடூரச் செயலை செய்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை துலுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் திருநங்கை மகேஷ். இவருடைய தோழி தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தைச் சேர்ந்த அனன்யா. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7 ஆம் தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்ந்த நோவாபூபன் மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரும் வழிமறித்து திருநங்கைகளை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுபகுதியில் வைத்து திருநங்கைகளை அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அனன்யாவின் முடியை அறுத்துள்ளனர். அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று நோவாபூபன், விஜய் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அனன்யா, மகேஷ் ஆகிய இரு திருநங்கைகளும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்ககூடாது என்று திருநங்கைகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையெடுத்து 2 திருநங்கைகளும் அங்கிருந்து யாரிடமும் சொல்லமால் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் கிரேஸ்பானு என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்து நோவாயுவான், விஜய் இருவர் மீதும் கழுகுமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், குற்றவாளிக இருவரையும் தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து கிரேஸ்பானு கூறுகையில், “திருநங்கைகள் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தவுடன், தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ராகார்க் தொடர்பு கொண்டு இரு திருநங்கைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவரும் காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருநங்கைகள் மீதான தாக்குதல் மனித உரிமை மீறியது. இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, இனி இது போன்ற சம்பவம் நடைபெறமால் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு” என்று கூறினார்.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News