Do you feel sleepy again when you wake up in the morning?
தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிற, தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. மனிதன் மட்டுமல்ல; எந்த உயிரினமான இருந்தாலும் தூக்கம் அவசியம் தேவை. நிறைய நேரங்களில் காலை எழும்போதே சோர்வாக இருப்பதைப் போன்று சிலர் உணர்வதுண்டு. 7 - 8 மணிநேரம் தூங்கியிருந்தாலும்கூட காலை எழுந்திருக்க முடிவதில்லை. இதற்கு காரணம் ஏன் என்று பலருக்கும் தெரிவதில்லை. சில ஆரோக்கிய குறைபாடுகளால் தூக்கப் பிரச்னை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.
சில உணவுப் பழக்கவழக்கங்களும் தூக்கப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும். அதேபோல் சில வாழ்க்கைமுறைகளை மாற்றியமைப்பதும் தூக்க பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதனால் காலை எழுந்திருக்கும்போது சோர்வு ஏற்படாமல் தடுக்கமுடியும்.
1. கஃபைன் பானங்கள்: பகலில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காபி குடிப்பது இரவு தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தும். கஃபைன் நிறைந்த பானங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது கவலை அல்லது பதற்றத்தை தூண்டும். எனவே இதுபோன்ற பானங்களை மாலை நேரத்திற்கு பிறகு முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
2. தொந்தரவான சூழலில் தூங்குவதை தவிர்த்தல்: ஆழ்ந்த தூக்கத்திற்கு, தூங்கும் இடம் அமைதியாக இருப்பது மிகமிக அவசியம். சத்தம் அதிகமாக இருக்கும் இடம் அல்லது அசௌகர்யமாக இடங்களில் தூங்கும்போது முழுமையான தூக்கம் கிடைக்காது. இதனால் காலை எழுந்தவுடன் மிகவும் சோர்வாகத்தான் இருக்கும்.
3. snooze செய்யக்கூடாது: இரவு அலாரம் வைத்து தூங்கும் பழக்கமுடைய பலருக்கும் இருக்கும் மற்றொரு பழக்கம், காலை அலாரம் அடித்தவுடன் அதை snooze செய்துவிட்டு தூங்குவது. இந்த பழக்கம் மேலும் தூக்க உணர்வையும், சோர்வையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே காலை அலாரம் அடித்தவுடன் snooze பட்டனை தொடாமல் எழுந்திருப்பது நல்லது.
4. குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம்: நமது உடல் சர்க்கார்டியன் சுழற்சியில் இயங்குகிறது. அதன்படி நாம் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். இந்த சுழற்சியை பின்பற்றாவிட்டால், தூங்குவதற்கும், எழுந்திருப்பதற்கும் சிரமமாக இருக்கும்.