மகளிர் ஆசியகோப்பை-இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

மகளிர் ஆசியகோப்பை-இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

8-வது மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இம்மாதம் 1-ந் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்று நடையைக் கட்டின.

Image

இந்த நிலையில் ஆசியக் கோப்பை மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் ஓப்பனர்களாக அத்தபத்து மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ஆகியோர் களமிறங்கினர்.

Image

நிதானமாக விளையாடத் துவங்கிய இந்த கூட்டணிக்கு எமனாக வந்து நின்றனர் இந்திய அணியின் வீராங்கனைகளான ரிச்சா கோஷும், ரேணுகா சிங்கும். அடுத்தடுத்த ஓவர்களில் இருவரும் திறம்பட செயல்பட்டு இரு ஓப்பனர்களையும் அடுத்தடுத்த ஓவர்களில் ரன் அவுட்டாக்கி வெளியேற்றினர். இதை இந்திய அணியின் பவுலர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் விக்கெட் வேட்டையை துவக்கினர்.

Image

ரேணுகா சிங் மற்றும் கயக்வாட் ஆகிய இருவரும் அடுத்தடுத்து களம் புகுந்த இலங்கை வீராங்கனைகளை ஒற்றை இலக்க ரன்களை தாண்டுவதற்குள் வீழ்த்தி பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்த வைத்தனர். 6,2,1,6,0,1 இது ஏதோ ஒரு ஊரின் அஞ்சல் பெட்டி எண் என நினைக்கிறீர்களா? இல்லை. இலங்கை அணியில் இன்று களமிறங்கிய முதல் ஆறு வீராங்கனைகள் குவித்த ரன்கள் தான் இவை.

Image

பின்னர் ரனசிங்கே 13 ரன்கள், அச்சினி குலசூர்யா 18 ரன்கள் குவித்து நம்பிக்கையளித்த போதிலும், தொடர்ந்து இரு விக்கெட்டுகளை ஸ்நே ரானா வீழ்த்தி இலங்கை இன்னிங்ஸ்க்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 65 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா மற்றும் கயக்வாட் ஆகிய இருவரும் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Image

இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. எளிய இலக்கு என்று நிதானித்து ஆடாமல் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினார் ஸ்மிருதி மந்தனா. எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டை நோக்கி ஸ்மிருதி விரட்டியடிக்க இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறத் துவங்கியது. ஷிஃபாலி 5 ரன்களிலும், ஜெமியா 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய போதிலும், ஸ்மிருதியின் ரன்வேட்டை நிற்கவில்லை.

Image

8.2 ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார் ஸ்மிருதி மந்தனா. ரனசிங்கே வீசிய அடுத்த பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஸ்மிருரிதி மந்தனா அரைசதம் கடந்து சாதனை புரிந்தார். இந்திய அணியும் 7வது முறையாக ஆசியக் கோப்பை மகுடத்தை தனது தலையில் ஏந்தியது. இலங்கை அணியின் விக்கெட்டுகளை ரன் அவுட், போல்ட், கேட்ச் என எல்லா வகையிலும் வேட்டையாடி இந்திய அணியை சாம்பியனாக்கிய ரேணுகா சிங் ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.

Image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post