
கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி ஊத்துக்கோட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த பணியாளர்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் அலுவலக வாயிலில் அமர்ந்து பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அக்டோபர் மாதம் பிறந்தும் கூட இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேரூராட்சி செயல் அலுவலரிடம் கூறி ஊதியம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்பினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News