இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற வாலிபர், பிணையில் வந்தவுடன் சிறை வெளியே அப்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் மேலூரில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யா மற்றும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த நிலையில் அழகுராஜா ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகிவந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அழகுராஜா வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் ரம்யா புகாரளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு அழகுராஜா கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவுடன் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். இவர் வெளிநாடு சென்றதால் கொட்டாம்பட்டி காவல்துறையினரால் லுக்அவுட் நோட்டீஸ் மட்டும் அப்போது வெளியிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்தார் அழகுராஜா. லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேலூரிலுள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் இன்று இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த அழகுராஜா, தன் மீது புகார் அளித்த ரம்யாவை சிறையின் வெளியே அருகே இருந்த காளியம்மன் கோயிலில் ரம்யாவிற்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் வந்திருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் யாரும் வரவில்லை , வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News