
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வந்த ஆளுநர் தடையாக இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம் சேலம் மெய்யனூர் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் நம் மண்ணிற்கான உரிமைகளை கேட்க ஒருபோதும் அச்சப்படமாட்டோம். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்காக மட்டும் தொடங்கிய மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பல உயிர்களை கொல்லும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திய வேல்முருகன், ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் கூறியதுபோல மதுபானக் கடைகளை படிப்படியாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக தங்களோடு திமுகவும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் கூறினார். எட்டு வழி சாலை விவகாரத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏன் தடுமாற்றம் இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தினால் கூட்டணியிலிருந்து குதர்க்கமாக பேசுகிறேன் என்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்; அவ்வப்போது மக்கள் பிரச்னைகளை நினைவுப்படுத்தும் வேலையை கூட்டணியிலிருந்து செய்வேன்.
ஆட்சியாளர்களிடம் இருந்து என்னை பிரிக்க சங்பரிவார் சூழ்ச்சி செய்கின்றனர். தமிழக முதல்வர் கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்த ஆளுநரே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News