பெண் குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற மர்ம பெண் - போலீசார் தீவிர விசாரணை

தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்து பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம பெண்ணை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்ல தயாராக இருந்தது. அந்தப் பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. தொடர்ந்து பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நிலையில் பேருந்து இருக்கையில், இருந்த அந்த குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பயணிகள் குழந்தையின் பெற்றோரை தேடினர்.

image

ஆனால், யாரும் வராத சூழலில் தரகர் பெரியசாமி என்பவர் உடனடியாக குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தார். பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம பெண் யார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு மர்ம பெண் அரசுப் பேருந்தில் முன்பக்கமாக ஏறி, பின்னர் குழந்தையை பேருந்தில் விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றது பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகள் வைத்து பார்க்கும் போது, இந்த குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா? குடும்பத் தகராறு காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றாரா? குழந்தையின் உண்மையான பெற்றோர் யார்? என கண்டறியும் பணியிலும், அந்த மர்ம பெண் குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

image

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தொப்பூர் அருகே உள்ள தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர், பேருந்தில் பெண் குழந்தையை விட்டு விட்டுச் சென்ற சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post