ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிப்பெண் குறைவாக வழங்கிய ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா கிராமத்தில் இயங்கிவரும் கோபிகந்தர் பஹாதியா அவாஸ்யா என்ற பள்ளியில் அண்மையில் மேல்நிலை வகுப்புக்கான தேர்வு நடந்துள்ளது. இதில் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டு சமீபத்தில் மதிப்பெண் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் ஆத்திரத்தில் அவர்களின் ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
கணிதப்பிரிவு ஆசிரியர் குமார் சுமான், தலைமை க்ளெர்க் லிபிக் சுனிராம், அசின்தோ குமார் மாலிக் ஆகியோர் அங்கிருந்த மாமரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர் குமார் சுமான் தான் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். தாக்கிய மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கியுள்ளனர். தாக்கிய மாணவர்கள் உள்ள வகுப்பில் மொத்தம் 36 மாணவர்கள் உள்ள நிலையில், அவர்களில் 11 பேர் தேர்வில் தோல்வியுற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.