
தருமபுரியில் டீக்கடையில், 11 சவரன் தங்க நகையோடு மறந்து வைத்துச் சென்ற பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான டீ கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தருமபுரி ரயில் நிலையம் அருகே மணி என்பவர் கடந்த 10 வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை டீ குடிக்க வந்த ஒரு நபர் தன் கையில் கொண்டு வந்த பையை மறந்து அங்கே விட்டு விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து மணி கடையை சுத்தம் செய்யும்போது அங்கு ஒரு பை இருந்துள்ளது.
இதனை டீ அருந்த வந்தவர்கள் தான் யாரோ தவறுதலாக விட்டுச் சென்று இருப்பார்கள் என்று பையை பத்திரமாக எடுத்து வைத்திருந்தார். ஆனால், வெகு நேரமாகியும் யாரும் உரிமைகோரி வரவில்லை. இதனால் பையை திறந்து பார்த்தபோது உள்ளே புதியதாக வாங்கி வந்த 11 சவரன் தங்க நகை இருந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக அவர் நண்பர்களின் உதவியோடு அந்த பையை எடுத்துக் கொண்டு நகர காவல் நிலையத்துக்கு சென்று காவல் ஆய்வாளர் நவாஸிடம் நடந்ததை கூறி அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். பின்னர் வழக்கம் போல் மணி டீக்கடைக்கு சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து பையை தொலைத்தவர் டீக்கடைக்கு வந்து தன்னுடைய கைபையை காணவில்லை. நீண்ட நேரமாக தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு ஏதோ விட்டு விட்டுச் சென்று விட்டேனா என பார்க்க வந்தேன் என்று கூறியுள்ளார். அப்போது உங்களுடைய பை என்னிடம் தான் பத்திரமாக இருந்தது.
பையை திறந்து பார்த்தபோது அதில் நகை இருந்ததால் நான் தருமபுரி நகர காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளேன். நீங்கள் அங்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று மணி கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் நகர காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நகைக்குரிய ஆவனங்களை காண்பித்ததை அடுத்து நகர காவல் ஆய்வாளர் பத்திரமாக நகையை ஒப்படைத்தார்.
இந்நிலையில் டீக்கடையில் தவறிவிட்டுச் சென்று தங்க நகையை காவல் துறையினரிடம் நேர்மையாக ஒப்படைத்த, மணியை காவல் துறையினர் மற்றும் தருமபுரி நகர பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News