தற்கொலை செய்து கொண்ட காவலர் - உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த மக்கள்: காரணம் என்ன?

சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை ஊருக்குள் விட மறுத்த ஊர்மக்கள். மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இருனாபட்டு ஊராட்சி திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மைசூர் பகுதியைச் சேர்ந்த வசு என்பவருடன் திருமணமாகி கிஸ்மிதா என்கிற ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சிட்டி ஏஆர் காவலராக பணியாற்றி வந்த பிரபு திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அவருடைய சொந்த ஊரான இருனாபட்டு திருவிக நகருக்கு உடலை எடுத்து வந்துள்ளனர்.

image

அப்போது அப்பகுதி மக்கள் தற்கொலை செய்துகொண்ட பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை இங்கே எடுத்து வரக்கூடாது அது எங்கள் ஊருக்கு நல்லதல்ல என்று கூறி இறந்து போன காவலரின் உடலை ஊருக்குள் விடாமல் சுமார் 2 மணி நேரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், சக காவலர்கள் உதவியுடன் அப்பகுதி மக்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

image

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சமரசம் ஆன நிலையில், ஊருக்கு வெளியே சடலத்தை வைத்து ஈமச்சடங்குகளை செய்து அருகே உள்ள சுடுகாட்டில் காவலரின் உடல் புதைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post