கரூரில் உடல்நலக் குறைவு காரணமாக பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கந்தப்பொடிகார தெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - நிஷாந்தி தம்பதியர். வெங்கடேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு தியாலினி (4) என்ற மகளும், பூபன் பார்கவ் (3) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், வெங்கடேசன் நேற்று தனது சகோதரர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே அனுமன்பள்ளி கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளார். நிஷாந்தினி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு குழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நிஷாந்தினி நேற்று மாலை தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெகு நேரம் கதவு சாத்தப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மூவரும் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
இதையடுத்து உடனடியாக வெங்கடேஷ்க்கு தகவல் அளித்த நிலையில், தகவல் அறிந்து அங்குவந்த நகர காவல்நிலைய போலீசார், 3 உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நிஷாந்தினிக்கு அறுவை சிகிச்சை மூலமே 2 குழந்தைகளும் பிறந்ததாகவும், இதனால் அவருக்கு முதுகில் தொடர்ந்து வலி இருந்ததாகவும், மகன் பூபன் பார்கவ் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளித்தும் வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நிஷாந்தினி தனது குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் தெரியவந்துள்ளது. கரூரில் இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News