இந்த ஆண்டு வழங்கப்படவிருக்கும் நல்லாசிரியர் விருதுகளுக்கான பரிந்துரைகள் சிலவற்றை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் சிறப்பான கல்விப்பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளோடு கூடுதலாக புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் படி, டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களை நல்லாசிரியர் விருதுகளுக்கு பரிந்துரைக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு மூலம், ஐந்து ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராத அளவிற்கு பணியாற்றியிருக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News