பரிசல் மூலம் மீட்டு எச்சரித்து அனுப்பிய தீயணைப்பு வீரர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் நடுவே சிக்கியிருந்த காதல் ஜோடி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரின் கலங்கல் தன்மை அதிகரிப்பால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

காவிரி வெள்ளப்பெருக்கின் காரணமாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. காவேரிப்பட்டி, மந்தியான் திட்டு, பூலாம்பட்டி பரிசல் துறை, குப்பனூர், கூடக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரதான இணைப்புச் சாலைகள் தண்ணீரில் மூழ்கின.

image

இதனிடையே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் நடுவே சிக்கியிருந்த காதல் ஜோடி பத்திரமாக மீட்கப்பட்டனர். காரமடையைச் சேர்ந்த ஒரு ஜோடி, விளாமரத்தூர் அருகே பவானி ஆற்றின் நடுவே இருந்த மேட்டில் சிக்கியிருந்தனர். அவர்களை கயிறு கட்டி பரிசலில் மீட்ட தீயணைப்புத்துறையினர், எச்சரித்து அனுப்பினர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், நீரில் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளது. தண்ணீர் செந்நிறத்தில் பாய்ந்தோடுவதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

image

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் கனமழையால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.75 அடியைக் கடந்தது. ரூல் கர்வ் அட்டவணைப்படி நீர்மட்டத்தை 137.50 அடியாக நிலை நிறுத்தும் வகையில், கேரளாவிற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக ஆயிரத்து 870 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் 13 மதகுகளில் 10 மதகுகளில் நீர் வெளியேற்றப்படுகிறது.




from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post