’இவ்ளோ வீரர்கள் இருந்தா யார செலக்ட் பண்றது’.. உச்சக்கட்ட குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம்

உலகக் கோப்பை போன்ற ஒரு தொடருக்கு அணியை தேர்வு செய்வது என்பது உண்மையில் மிகவும் சவாலான விஷயம். அதுவரை விளையாடிய வீரர்களில் மிகச் சிறந்த வீரர்களை கொண்ட அணியை உருவாக்க  வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான அணியை இறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது. 

யாரெல்லாம் களத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார்கள்:

இந்திய அணியை பொறுத்தவரை 25 முதல் 30 வீரர்கள் வரை தற்போது ஆக்டிவ் ஆக இருக்கிறார்கள். இந்த வீரர்களில் முதலில் 15 -18 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை தேர்வு செய்ய வேண்டும். இது இந்திய அணி நிர்வாகத்திற்கு இருக்கும் முதல் சவால். இரண்டாவது முக்கிய சவால், இந்தப் பட்டியலில் இருந்து 11 பேர் கொண்ட ஆடும் லெவனை தேர்வு செய்வது இரண்டாவது மிகப்பெரிய சவால். கடந்த 8 மாதங்களில் களத்தில் ஆக்டிவ் ஆக விளையாடி வரும் வீரர்களை ஒவ்வொரு துறை வாரியாக பார்க்கலாம்.

பேட்டிங்:

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், தினேஷ் கார்த்திக், விராட் கோலி

ஆல் ரவுண்டர்:

ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல்,

பந்துவீச்சு(சுழல்)

அஸ்வின், சாஹல், ரவி பிஸ்னோவ்

பந்துவீச்சு (வேகம்)

புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர், ஆவேஷ் கான், ஷர்துல் தாகூர், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

ஓர் அணி எப்படி அமைய வேண்டும்:

வழக்கமாக 11 பேர் கொண்ட அணியைப் பொறுத்தவரை 4, பேட்ஸ்மேன், 4 பவுலர்கள் மற்றும் 3 ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்வார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை யார் ஓபனிங், ஒன் டவுன் யார்?, மிடில் ஆர்டரில் யார் யார்? என்று பிரிச்சு பார்க்கணும். அதேபோல், ஆல் ரவுண்டரை பொறுத்தவரை பேட்டிங் ஆல் ரவுண்டர் எத்தனை பேர், பவுலிங் ஆல்ரவுண்டர் எத்தனை பேர் என்பதை சரியாக தேர்வு செய்யணும். பந்துவீச்சை பொறுத்தவரை எத்தனை சுழல் பந்துவீச்சாளர்கள், எத்தனை வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்குவது என்பது சிக்கலாக இருக்கும்.

இப்படி ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தால் தான், அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் கூடுதலாக ஒரு வீரரை கணக்கில் வைத்து அணியை கட்டமைப்பார்கள். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, புவனேஷ் குமார், தீபக் சாஹர் என மூவரை தேர்வு செய்கிறார்கள் என்றால் கூடுதலாக இரு வீரர்களை அணியில் இருப்பார்கள். அதேபோல், ஒவ்வொரு பிரிலும் கூடுதலாக வீரர்களை தேர்வு செய்ய வேண்டி வரும்.

ஓபனிங்:

image

இந்திய அணியைப் பொறுத்தவரை சமீக காலமாக டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக களமிறங்கி வந்தனர். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா உடன் சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். இருவருமே தொடக்கத்தை சிறப்பாக அமைத்து கொடுத்தார்கள். ரோகித் சர்மா ஓபனிங் இறங்குவது உறுதி என்பதால் அவருடன் யாரை களமிறக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. இஷான் கிஷனையே வைத்து முயற்சிக்கக் கூடும். கே.எல்.ராகுல் இடம்பெற்றால் நிச்சயமாக இந்த சிக்கல் கூடுதலாகவே இருக்கும். அவரும் நீண்ட காலமாகவே ஓபனிங் விளையாடியவர். ஐபிஎல் போட்டிகளிலும் ஓபனிங் விளையாடுவார்.

ஒன் டவுன்:

image

ஒன் டவுன் பேட்டிங்கை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயர் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கியுள்ளார். சில போட்டிகளில் தீபக் ஹூடா களமிறங்கி இருக்கிறார். ஆனால், ஒன் டவுன் என்றாலே விராட் கோலி தான். விராட் கோலி இருந்தால் அவர்தான் ஒன் டவுன் இறங்க அதிக வாய்ப்பு இருக்கும். அப்படி அவர் இறங்கினால் ஸ்ரேயாஸ், தீபக் ஹூடா போன்றவர்கள் நான்காவது, ஐந்தாவது இடத்திற்கு செல்வார்கள்.

விக்கெட் கீப்பிங்:

image

விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தான் தற்போதுவரை உறுதியான வீரராக உள்ளார். கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் என யார் அணியில் இடம்பெற்றாலும் ரிஷப் பண்ட்க்குதான் அதிக வாய்ப்புண்டு.

ஹர்திக் பாண்டியா & தினேஷ் கார்த்திக்:

image

இந்திய அணியை பொறுத்தவரை மிகவும் உறுதியான வீரர் என்றால் அது ஹர்திக் பாண்ட்யா தான். அவரது அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமை இந்திய அணியில் அவரது இடத்தை ஆழப் பதிய வைத்துள்ளது. தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை அவ்வவ்போது தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தாலும், மிடில் ஆர்டரில் கடும் போட்டி நிலவுவதால் அவருக்கான இடம் சிக்கலாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல்

image

ஆல்ரவுண்டர் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆல் ரவுண்டரை தேர்வு செய்வதில் தான் வெற்றியின் குறிப்பிட்ட பகுதி இருக்கிறது. இதில் ஜடேஜாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

கடும் போட்டியில் வேகப்பந்துவீச்சு

image

பேட்டிங்கை காட்டிலும் பந்துவீச்சில் தான் தேர்வு செய்வதில் சிக்கல் கூடுதலாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒரு புறம். ஆவேஷ் கான், தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். இதில், அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்களையும், ஒரு இளம் வீரரையும் தேர்வு செய்ய வாய்ப்புண்டு. இரண்டு இளம் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்வது சற்றே ரிஸ்க் ஆக அமைந்துவிடும். ஹர்ஷல் படேல் அல்லது தீபக் சாஹர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது. பும்ரா அணியில் நிச்சயம் இடம்பெறுவார். புவனேஷ் குமாரையும் நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றே தெரிகிறது.

8 மாதங்களில் 8 கேப்டன்கள்: திட்டமிடல் இல்லையா?

image

டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாகும் அணி குறித்து பார்ப்பதற்கு முன்பாக முதலில் இந்திய அணி சமீபகாலமாக சந்தித்து வரும் சிக்கல்களை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது, கடந்த 8 மாதங்களில் 8 கேப்டன்களை இந்திய அணி சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் - நவம்பரில் துபாயில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடந்து முடிந்தது. அந்தத் தொடரோடு விராட் கோலி டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகினார். மற்ற ஃபார்மட்களுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ரோகித் சர்மா மூன்று ஃபார்மட்களுக்குமான கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த உலகக்கோப்பைத் தொடர் நடந்து முடிந்து முழுமையாக 8 மாதங்கள் ஓடியிருக்கிறது. நியாயப்படி பார்த்தால் ஒரு கேப்டனாக ரோகித் இதற்குள் முழுமையாக செட்டில் ஆகியிருக்க வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் ஐ.சி.சி தொடர்களை மனதில் வைத்து தனக்கே தனக்கான ஒரு அணியை கட்டியெழுப்ப தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. காரணம், இதையெல்லாம் நடத்தும் அளவுக்கு அவர் கேப்டன் பதவியில் இன்னமும் முழுமையாக அமரவே இல்லை. மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்து கடந்த 8 மாதங்களில் மட்டும் இந்திய அணியை 8 கேப்டன்கள் தலைமை தாங்கியிருக்கிறார்கள். இருப்பினும், ரோகித் சர்மா தான் இந்திய அணியை தலைமை தாங்குவார் என்று கிட்டதட்ட உறுதியான தகவல்.

தொடர்ச்சியாக வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை:

கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணி நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுடன் விளையாடியுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி20 தொடரை விளையாடி முடித்துள்ளது. கடந்த 8 மாதங்களாகவே அணிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான அணியை இதுவரை முயற்சித்து பார்க்கவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, மிடில் ஆர்டர் என எல்லாவற்றிலும் பல்வேறு வீரர்களை மாற்றி மாற்றி இறக்கப்பட்டு வருகிறது. இது சோதனை முயற்சியா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அது எந்த வகையில் ஒரு சிறப்பான அணியை தேர்வு செய்ய உதவும் என தெரியவில்லை. ஒரு சில வீரர்களில் மாற்றங்கள் இருக்கலாம். உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரை விளையாடுவதற்கு முன்பு ஒரு அணியாக எல்லா வகையில் அது செட் ஆகியிருக்க வேண்டும். அப்போதுதான் எவ்வித சிக்கலும் இல்லாமல் அந்த தொடரை எதிர்கொள்ள முடியும்.

மேற்சொன்ன இரண்டு சிக்கல்களையும் தாண்டி முழுமையான ஆற்றல் கொண்டு ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டிய சவாலை இந்திய அணி நிர்வாகம் எதிர்கொள்ள உள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post