முதியவரை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற இளம் காதல் ஜோடி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப் போட்டு திருட முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் 76 வயதான பெரியராயப்பன். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம் பாளையத்தில் பெரியராயப்பனும் அவரது மனைவி ராஜம்மாளும் தனியே வசித்து வந்தனர். ராஜம்மாள் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த வேளையில் பெரிய ராயப்பன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

image

அப்போது மதியம் 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். பெரிய ராயப்பன் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது அவரது பின்னாலேயே வீட்டிற்குள் சென்ற அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அவரை கட்டிப் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைக்க அவர்கள் முற்பட்டபோது அது தோல்வியில் முடிந்துள்ளது.

image

இதனை அடுத்து அங்கு பையில் இருந்த 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு இருவரும் தப்ப முயன்றனர். அப்போது வெளியூருக்குச் சென்றிருந்த மகனும் மருமகளும் வீட்டிற்கு வந்துள்ளனர். கட்டப்பட்ட நிலையில் இருந்த பெரிய ராயப்பன் சைகை மூலம் வெளியே தப்பிச்சென்ற இருவரையும் பிடிக்க கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரையும் இளம் பெண்ணையும் மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

image

விசாரணையில் அந்த இளைஞர் விருதுநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், அவருடன் வந்த பெண் திருச்சியை சேர்ந்த செண்பகவல்லி என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி காதலர்களாக சிங்காநல்லூரில் வசித்து வந்தது தெரியவந்தது. இவர்கள் இதற்கு முன்பாகவே கோவை குனியமுத்தூர் பகுதியில் முதியவர் ஒருவரை கட்டிப்போட்டு 20 ஆயிரம் ரூபாய் வரை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இருவரிடம் இருந்தும் இரும்புக் கம்பி,இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post