நம்முடன் இருந்த துரோகிகள் தான் நம் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி

கடந்த தேர்தலில் சில துரோகிகள் நம்முடன் இருந்து கொண்டே எதிர்க்கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு அதிமுக வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

image

முதலில் அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் மேடைக்கு வந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திருப்பத்தூர் மாவட்டமாக புதியதாக உருவாக்கப்பட்டதற்கு அதிமுக அரசே காரணம். அதிமுகவை அழித்துவிடலாம் என நினைக்கக்கூடிய எதிர்க்கட்சியினருக்கு சம்மட்டி அடிக்கும் வகையில் திரளாக கூடியிருக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்ட மக்களே ஒரு சான்றாக உள்ளனர் அடுத்ததாக வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் நீங்கள் அதிமுக விற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இங்கே இருக்கக்கூடிய மக்கள் ஒரு சான்றாக இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஓட ஓட விரட்ட கூடிய வகையில் நீங்கள் கூடியிருக்கின்றீர்கள்.

image

இன்றைக்கு நம்மோடு இருந்து கொண்டு சில துரோகிகள் வெற்றி வாய்ப்புகளை தடுப்பதற்க்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டனர். அதனால் நமக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் யார் துரோகி அந்தக் கருப்பு ஆடு யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த துரோகிகள் எல்லாம் இன்றைக்கு ஆட்சியாளர்களோடு கைகோர்த்துக்கொண்டு கைப்பாவையாக செயல்பட்டு நமது இயக்கத்தை முடக்க பார்க்கின்றார்கள்.

ஒரு போதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது என விமர்சித்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாகவும் கூறினர். ஆனால் தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

image

குறிப்பாக பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகள் பேருந்தில் மது பாட்டிலை குடித்துக் கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் பள்ளிவாசல்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதை சட்டப்பேரவையில் நான் சுட்டிக் காட்டி இருக்கின்றேன்..

ஆன்லைன் ரம்மி அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ஆட்சியில் ஆன்லைனில் ரம்மி விளையாட்டு அதிகரித்து உள்ளது. இதனை தடை செய்ய மற்ற மாநிலங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் இதனை தற்பொழுது கருத்து கேட்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். முதலமைச்சர் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க மக்களிடம் கருத்து கேட்கும் வகையில் செயல்படுவது என்பது வேதனைக்குரிய ஒரு செயலாக இருக்கிறது” என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post