
ஆபத்தை உணராமல் காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூன்று இளைஞர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
செல்ஃபி மோகத்தால் வெள்ளத்தின் பிடியில் சிக்கிய மூன்று இளைஞர்கள் தவிக்கும் காட்சிகள் தான் இவை. சேலம் மேட்டூர் அணையில் இருந்து மாலையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆபத்தை உணராமல் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால், சில நிமிடங்களில் நீர் வரத்து அதிகரித்ததால், பாறையின் மீது நின்ற மூன்று இளைஞர்களும் கரைக்கு வரமுடியாமல் திணறினர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மூன்று இளைஞர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீர் கரைபுரண்டோடியதால் மீட்பு குழுவினருக்கு சவால் ஏற்பட்டது. இதனால் பதற்றமும் அதிகரித்தது. பின்னர் கயிற்றில் கல்லை கட்டி இளைஞர்களிடம் வீசினர். அவர்கள் கயிற்றை பிடித்துக் கொள்ள, மீட்புகுழுவினர் கயிற்றைப் பிடித்தபடி சென்றனர்.
பின்னர் இளைஞர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து அடுத்தடுத்து பத்திரமாக கரை சேர்ந்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தாரமங்கலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். அதேநேரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆபத்தை உணராமல் யாரும் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News