
புதுச்சேரியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தபோது அவர் தப்பிக்க முயற்சித்ததால் தவறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது.
புதுச்சேரி அடுத்த சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தனா (18), கடந்த 19 ஆம் தேதி கல்லூரி முடிந்த பின்னர் வீடு திரும்பினார். அப்போது அவரது உறவினரான முகேஷ்(22) என்பவரால் ஒரு தலைக்காதல் காரணமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த முகேஷை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசார் முகேஷை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சன்னியாசிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மறைந்து இருப்பதாக ரகசியல் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்று பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பிக்க முயற்சி செய்ததில் தவறி விழுந்து கையில் முறிவு ஏற்பட்டது. அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசார் முகேஷை கைதுசெய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மாணவி கொலை வழக்கில் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தவறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News