தலைவலி நபருக்கு நபர் பொதுவாக மாறுபடும். அதனால் சிலருக்கு ஒற்றை தலைவலி இருந்தால்கூட தெரியாது. சிலருக்கு சாதாரண தலைவலி அடிக்கடி வந்தால்கூட அது ஒற்றை தலைவலியாக இருக்கலாம் என்ற பயம் எழுந்துவிடும். ஆனால் உண்மையில் ஒற்றை தலைவலி(migraine) என்றால் என்ன?
தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் ஒரு பிரச்னை. எனவே ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளை கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சைபெறுவது அவசியமாகிறது.
கழுத்தில் வலி: ஒருவருக்கு ஒற்றை தலைவலி ஏற்பட்டால் அந்த வலி கழுத்திற்கும் பரவும். இது விறைப்பை ஏற்படுத்துவதோடு கழுத்து இயக்கத்தையும் கடினமாக்கும்.
பெலவீனம் மற்றும் கூச்சம்: ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் பலவீனமாக உணர்வதோடு, உடலின் ஒருபக்கம் கூச்ச உணர்வும் இருக்கும்.
தூக்கமின்மை: ஒற்றை தலைவலி வந்தால் தூக்கமின்மை பிரச்னை இருக்கும். மேலும் தூங்குவதில் கடினம் அல்லது முழுமையாக தூங்க முடியாமை போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
மறதி: ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் குழப்ப மனநிலையே இருக்கும். மேலும் மறதியும் ஏற்படும். நோயாளிக்கு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவோ, தெளிவாக யோசிக்கவோ முடியாது.
வண்ணங்கள் மற்றும் வெளிச்சம்: பிரகாசமான வெளிச்சம், பல்வேறு வண்ணங்களை தெளிவாக பார்க்கமுடியாமை, மங்கலான பார்வை, மின்னும் விளக்குகள், வளைந்து நெளிந்த வண்ணங்கள் போன்றவற்றை பார்க்கமுடியாமை போன்ற பிரச்னைகள் ஒற்றை தலைவலியால் ஏற்படும். டென்ஷன் அல்லது சைனஸால் தலைவலி ஏற்படும்போது ஒற்றை தலைவலிபோல் பார்வை பிரச்னைகள் இருக்காது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News