
வங்கக்கடலில் இன்று புதிய புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில், கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மாலை வட ஆந்திரா - ஒடிசா கடற்கரைக்கு சென்று பின்னர், மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் ஒடிசா அல்லது ஆந்திராவில் கரையை கடக்காமல், கடற்கரைக்கு இணையாக பயணிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில், சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு வலுப்பெற்றதை அடுத்து, கடலூர், பாம்பன், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News