``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு

“2026 ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை மயிலாப்பூரில் 'திராவிட மாயை' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் திராவிட தலைவர்கள் சித்தாந்தத்தை எப்படி உருவாக்கினார்களோ அதன்படி தற்பொழுது திராவிட கட்சி செயல்பட்டு வருகிறது. 2019 யில் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தின் 626 கிராமங்களில் தீண்டாமை இருக்கிறது. அதிலும் திருவாரூரில் 158 கிராமங்களில் தீண்டாமை அதிகமாக கோலோங்கி இருக்கிறது.

image

தமிழகத்தில் சாதிய அடிப்படையில் ஆணவக் கொலைகள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த நன்மை நடந்தாலும் சம்பந்தமில்லாமல் அது திமுக-வால் தான் நடந்தது என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் 1967-க்கு முன்பாகவே அதிக அளவில் சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தில் அதிக சாதனை அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

திமுகவை அழிப்பதென்பது, மிகவும் சுலபமான வேலை, சக்கர வியூகம் போல் செயல்பட்டு வருகிறது. பொய்யை திரும்பத் திரும்ப கூறுவதே ஒரு வட்டமாக (outer layer) வைத்திருக்கிறார்கள். ஆபாசமான சாதியை மதத்தையும் கொச்சைப்படுத்தி பேசுவதையே குறித்து (attack layer)செயலாக வைத்திருக்கிறார்கள். திமுக பெரிய வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது.

image

இன்றைய ஆட்சிக்காலத்தில் திருச்சி,விழுப்புரம் என உள்ளிட்ட இடங்களில் அமைச்சர்களை குறுநில மன்னர்களாக வளர்த்துள்ளனர். அப்படி கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை திராவிட ஆட்சி பாதுகாப்பாக வைத்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு டெல்லிக்கு சென்றால் ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள். விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட தனியாக டெல்லி சென்று, ஆங்கிலம் தெரியாததால் தமிழகத்திற்கான ஒரு பைசா நிதியை கூட அவர்களால் பெற்று வர முடியாது.

தமிழகத்தில் மக்கள் தற்பொழுது அதிக அளவில் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் எதை பார்க்க வேண்டும், எதை கேட்க்க வேண்டும் என பல காலங்களாக அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் சமூக வளைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக இப்போது அதனை அவர்களால் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க... மெரினா கடற்கரையில் மணலில் புதைத்து விற்கப்பட்ட சாராயம்... மற்றொரு நபர் கைது

2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு மைல் கல்லாக இருக்கப் போகிறது. பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருகிறார்கள். 2026 ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post