
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அரியணை ஏறி முதலமைச்சர் ஆனார். முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு செல்கிறார். அங்கிருந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலகம் செல்கிறார். மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும் நிலையிலும் இன்று கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை தொடங்கியதும் நேரமில்லா நேரமாக எடுத்துக் கொள்ளப்படும். அரசின் செயல்பாடுகளை பாராட்டியும் ஓராண்டு நிறைவுக்கு முதலமைச்சரை வாழ்த்தியும் பேரவைக் கட்சித் தலைவர்கள் பேச திட்டமிடப் பட்டுள்ளது.
அவர்களின் உரைகளுக்கு நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News