குழந்தை உயிரிழப்பு: அரசு மருத்துவமனை அலட்சியமே காரணம் - உறவினர்கள் சாலைமறியல்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முறையாக சிகிச்சையளிக்காததால் பிறந்த ஆண்குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணிகண்டன். இவரது கர்ப்பிணி மனைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு 9ம்தேதி அழைத்து வந்துள்ளார். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும் இரு தினங்களுக்குள் சுகபிரசவம் ஆகும் என்றும் கூறி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.

image

இந்நிலையில், நேற்று மாலை வரை நன்றாக இருந்த பிரனீபாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இருந்த செவிலியர்கள் பாராசிட்டமல் மாத்திரை சாப்பிடும்படி கூறியதாகவும், பணியில் இருந்த மருத்துவர் நந்தினி பரிசோதனை செய்துவிட்டு பிரஷர் அதிகமாக உள்ளது குழந்தையும் திரும்பியுள்ளதால் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும். இல்லையென்றால் தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஆனால், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறப்பிற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள் குழந்தை இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, தலைமை மருத்துவர் ராஜசேகர் டிஎஸ்பி-கள் வசந்தராஜ், லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் நாகையிலிருந்து மருத்துவகுழுவினர் மூலம் மருத்துவசிகிச்சை குறித்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post