
மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்திற்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், இது எங்களது பாரம்பரியமான பழக்கம், அதை ஒருபோதும் கைவிட முடியாது என மடாதிபதி ஒருவர் அறிக்கை வெளியிட்டிருப்பது காலத்திற்கு ஒவ்வாததாகும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் எனக் கூறும் மடாதிபதிகள், தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது ஏன்? தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற மிக நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? இவற்றையெல்லாம் பயன்படுத்தும் போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?
மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை கைவிட்டு உலகத்தோடு ஒட்டிச் செல்லவேண்டும். இல்லையேல் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்ளார். இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பும், ஆதினத்திற்கு ஆதரவும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News