
தமிழகத்தில் பைக் டேக்ஸி போன்ற முறைகளில் வணிக நோக்கங்களுக்காக இருசக்கர வாகனங்களை பயன்படுத்த அனுமதியில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தன்னார்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு மாநில போக்குவரத்துத் துறை அளித்துள்ள பதிலில், இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் வணிக ரீதியான பெர்மிட் வகை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொதுத் தகவல் அலுவலர், இருசக்கர வாகனங்களை வணிகரீதியாக பயன்படுத்த அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் உபர், ஸ்விக்கி, சொமோட்டோ நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக அனுமதி அளித்ததாக எந்த தகவலும் தங்களிடம் இல்லையென்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மோட்டார் வாகன சட்டங்களின் படி இருசக்கர வாகனங்கள் வாடகை வாகனங்களாக கருதப்படாது. இதனால் அதற்கு வாடகை வாகனங்களுக்கான மஞ்சள் நம்பர் போர்டுகள் வழங்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பைக் டாக்சிக்கு மத்திய அரசு 2021 ஆம் ஆண்டே அனுமதி அளித்து அறிவிப்பை அரசிதழிலும் வெளியிட்டது குறிப்பிட்டது. தற்போது கோவா உள்ளிட்ட சில சுற்றுலா இடங்களில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பைக் டேக்ஸிகளுக்கு அனுமதியில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News