’உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துக’ - திம்பம் மலைப்பாதையில் விவசாயிகள் போராட்டம்

திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி விவசாயிகள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களில் சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் அடிப்பட்டு உயிரிழப்பதாகவும் இதனால் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிப் 10ம் தேதி திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து விவசாயிகள் சங்கத்தினர் ரிட் மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்டபிறகு ஏப் 6ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் 16.2 டன்னுக்கு குறைவாக உள்ள காய்கறி லாரிகள் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து உள்ளூர் மக்கள் சனிக்கிழமை இரவு முதல் காய்கறி வாகனங்களை இயக்குவதற்கு தயாராக இருந்தனர்.

image

இந்நிலையில், இரு மாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியில், கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை வனத்துறையினர் அனுமதிக்க மாட்டோம் என்றும், மாலை 6 மணிக்கு மேல் பிக்கப், மினி லாரி செல்ல கூடாது என வனத்துறை மூலம் தகவல் தாளவாடி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தாளவாடி விவசாய சங்க தலைவர் கண்ணையன் மற்றும் சாம்ராஜ்நகர் விவசாய சங்க தலைவர்; பிரகாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காரப்பள்ளம் சோதனை சாவடியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வனச்சரகர் சிவக்குமார் மற்றும் தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு, தாளவாடி வட்டாச்சியர் உமாமகேஷ்வரன் ஆகியோர் விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி 10 சக்கரம் வாகனம் மற்றும் 16.2 டன்னுள்ள வாகனத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் முறையிட்டனர். இதையடுத்து இரவு நேரத்தில் பிக்அப், மினி லாரி உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post