
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் ஒரகடம் வளர்மதி நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (54). இவர் தையல் எந்திரம் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 7ம் தேதி மதியம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து அதை தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்துள்ளார். பின்னர், இருசக்கர வாகனத்தில் முகப்பேரில் உள்ள விஜய் என்பவரின் கம்பெனிக்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற அவர், சிறிது நேரம் கழித்து வெளியே வந்துள்ளார். அப்போது மொபட்டின் சீட்டை உடைத்து, அதிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தற்போது சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு வந்த இருவர் பரபரப்பான சாலையில் நின்று கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்கை பட்டப்பகலில் லாவகமாக உடைத்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News