கூடலூர் அருகே தனியாக வசித்து வரும் மூதாட்டிக்கு மின் பயன்பாடு கட்டணமாக 25 ஆயிரத்து 71 ரூபாய் செலுத்தும்படி ரசீது அனுப்பப்பட்ட நிலையில், மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாதமங்கலம் பகுதியில் தேவகி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அதிகபட்சமாக இவரது வீட்டில் மூன்று மின் விளக்குகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த மாதம் அவரது வீட்டில் இருந்த பழைய மின் மீட்டர் அகற்றப்பட்டு புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டது.
வழக்கம் போல மின் கட்டணத்திற்கான குறுஞ்செய்தி அந்த மூதாட்டிக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதை பார்த்த அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் 25 ஆயிரத்து 71 ரூபாயை மின் கட்டணமாக செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த சுற்றுவட்டார பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் இதே போல் 15 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த ரசீது அனுப்பப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டியும், அப்பகுதி மக்களும் இணைந்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் நடத்திய விசாரணையில், மின் கணக்கீட்டாளர் ரமேஷ், நேரடியாக வீட்டிற்கு சென்று கணக்கிடாமல் அவராகவே தோராயமாக மின் கட்டணத்தை நிர்ணயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷை பணியிடை நீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News