ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது டெல்லி அணி வெற்றிபெற 6 பந்துகளுக்கு 36 ரன்கள், அதாவது 6 சிக்ஸர்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்ஸரை பொவேல் பறக்கவிட போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.
மெக்காய் வீசிய 3வது பந்து, பேட்ஸ்மேன் நெஞ்சு வரை வந்ததால், இதனை 'நோ பால்' என்று அறிவிக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் முறையிட்டார். ஆனால், அது 'நோ பால்' இல்லை என்று நடுவர் சொல்ல, கடுப்பான ரிஷப் பந்த் களத்தில் இருந்த பொவேல், குல்தீப் யாதவை உடனடியாக வெளியேறச் சொன்னார். பிறகு உதவிப் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவை மைதானத்துக்கு உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்து நடுவர்களிடம் விவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் ஆம்ரேவை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த பட்லர் இதுபற்றி ரிஷப் பந்திடம் காரசாரமாக விவாதம் செய்தார். இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பிரவீன் ஆம்ரே திரும்பியவுடன் ஆட்டம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது.
ரிஷப் பண்ட் நடந்து கொண்ட விதத்திற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். அவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில், நேற்றைய போட்டியில், ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளை மீறியதாக டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ரிஷப் பண்ட் தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், . ஐபிஎல் நடத்தை விதிமுறைகளில் லெவல்-2 தவறை செய்ததால் அவர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி அணியை சேர்ந்த ஷர்துல் தாக்கூருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்காக ஆம்ரே ஒரு போட்டியில் பங்கேற்பதற்கான தடையையும் சந்திக்க நேரிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் நேற்று அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த அந்த கணத்தில் இருந்து ரிஷப் பண்ட்டின் நடவடிக்கையை தோனியின் முந்தைய செயல்பாட்டுடன் ஒப்பிட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஆம், 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதேபோன்றதொரு சூழ்நிலையில் தன்னுடைய செயலால் எல்லோரையும் அதிர வைத்தார் தோனி. இதேபோல் அன்றும் நோ பால் கொடுக்கப்படவில்லை எனக் கூறி மைதானத்திற்குள்ளாகவே நுழைந்து நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார் தோனி.
தோனியா இது என ரசிகர்கள் எல்லோரும் அன்று வாயைப் பிளந்தனர். ஆம், கேப்டன் கூல் என பெயர் எடுத்த தோனி அன்று ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கே சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேபோன்றுதான் நேற்று ரிஷப் பண்ட் ஆக்ரோஷப்பட்டார். தோனியைப் போல் அவரது சிஷ்யனான ரிஷப் பண்ட்டும் நடந்து கொண்டதாக பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
இருப்பினும், ரிஷப் பண்டிற்கு இன்று அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தோனிக்கு அன்று எந்த தண்டனையும் கொடுக்கப்படவில்லை. ரிஷப் பண்ட்டிற்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ள என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் அன்று தோனிக்கும் அவரது சம்பளத்தில் 50 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டது. ரிஷப் பண்ட் விஷயத்தில் கூடுதலான தவறு இரண்டு உள்ளது. கேப்டனான அவர் உள்ளே செல்லாமல் மற்றொருவரை உள்ளே அனுப்பியது. மற்றொன்று வீரர்களை வெளியே வருமாறு அழைப்பு விடுத்தது. இந்த இரண்டும் முக்கியமான தவறுகளாக முடிந்துவிட்டது. அதனால்தான் பலரும் ரிஷப் பண்ட் செய்தது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதனிடையே டென்ஷன் ஆன ரிஷப் பண்ட்டை அறிவுரை கூறி ஷேன் வாட்சன் அமைதிப் படுத்துவது போன்ற வீடியோக்களும் வைரல் ஆகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News