அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கப்பட்ட நிலையில் மதுரையில் மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசினார்.
அதிமுகவின் தொடர் தோல்விகளை தொடர்ந்து சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற சசிகலா, விஜயாமதி விஸ்வாமித்திரர் கோவிலிலும், திருச்செந்தூர் முருகன் கோவிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது திருச்செந்தூரில் தங்கியிருந்த சசிகலாவை ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியும், தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓ.ராஜா தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஒ.ராஜா கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
தொடர்ந்து தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு காரில் சாலை மார்க்கமாக சென்னை சென்ற சசிகலாவை மண்டேலா நகர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஒ.ராஜா சந்தித்து பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News