
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவின் தயவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்தார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது...
நீட் தேர்வை பொருத்தவரை திமுக நாடகமாடுகிறது. இதில் புதிதாக பேசுவதற்கு ஒன்றும் கிடையாது. நீட் தேர்வு, ஏழை மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரானது கிடையாது. கடந்த ஆறுமாத காலமாக திமுகவிடம் வெள்ளை அறிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறோம். வெள்ளை அறிக்கையும் கொடுக்காமல் ஒரு பொய்யை தொடர்ந்து கூறி வந்தால் அது உண்மையாகி விடாது. தமிழக அரசு நீட்தேர்வு ரத்தாகிவிடும் என்று தொடர்ச்சியாக பொய்யை சொல்லி சொல்லி அது உண்மையாகி விடும் என்கின்ற நப்பாசையில் இருக்கிறார்கள். நீட் என்பது தமிழகத்தில் நிச்சயம் இருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

உக்ரைனில் இருந்து மீண்டு வந்த மாணவர்கள் ஒவ்வொருக்கும் பலவிதமான பிரச்னைகள் உள்ளது. பல்வேறு கட்சிகளிடையே பலவிதமான கருத்துகள் உள்ளன. ஒவ்வொரு கருத்துக்கும் தொடர்பு இல்லாததுபோல் உள்ளது. திமுக எம்பி டிஆர்.பாலு போர் சூழலில் இருந்து மீண்டு வந்த மாணவர்களை ரஷ்யாவிற்கு சென்று படிக்கக் கூறுகிறார். மத்திய அரசை பொருத்தவரை மாணவர்களின் நலனை சார்ந்து தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
உக்ரைன் ரஷ்யா போர் சூழல் சீக்கிரம் சமாதானம் ஆகிவிடுமா என்பதை பார்த்த பிறகுதான் மத்திய அரசு நல்லதொரு முடிவெடுக்க முடியும். சில பேர் சொல்கிறார்கள் என்பதற்காக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்கின்ற முடிவை மத்திய அரசு எடுத்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது.
திமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி என்பது கண் துடைப்பு நாடகமாகதான் இருக்கிறது. சமூக நீதி என்பது கிடையாது. கட்சி கூட்டணியில் இருக்கிறது என்பதற்காக கொடுக்கும் சீட்டை மண்டியிட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தமிழக மக்கள் இந்த நாடகத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்
பள்ளிக் கல்வியை பொருத்தவரை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், நிதியில் 92 சதவீதம் ஆசிரியர்களுக்கு சம்பளமாக கொடுத்தது போக வெறும் எட்டு சதவீதத்தில் மட்டுமே தான் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள நிதி இருக்கிறது எனக் கூறுகிறார். இவ்வாறு இருக்க தமிழக மாணவர்களை எவ்வாறு அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முடியும்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்தையும் இவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழகத்தில் அரசுப் பள்ளியின் தரம் தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருகிறது. தமிழகத்தை விட அண்டை மாநிலங்களில் அரசுப் பள்ளியின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே செல்கிறது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் காணப்பட்டாலும், இந்தியாவில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கு மேல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில், பெட்ரோல் விலையை திமுக அரசு குறைக்கும் என கூறியிருந்தது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. இதை முதலில் எதிர்க்கட்சிகள் குறையாக எடுத்து கேள்வி கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவின் தயவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் திமுக வேண்டும் என்கிற நப்பாசையில் செயல்படுகிறார்கள். தைரியமிருந்தால் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை ஏன் நிறைவேற்றவில்லை என திமுகவை பார்த்து கேள்வி கேட்கட்டும். அதற்கு பிறகு பதில் சொல்லலாம்” என்றார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News