பெற்றோரை காணாமல் பரிதவித்த 3 வயது சிறுவன்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்

அரூர் பேருந்து நிலையத்தில் பெற்றோரை காணாமல் தவித்த மூன்று வயது சிறுவனை பாதுகாத்து இரண்டு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பு -வசந்தா தம்பதியினர், கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து விட்டு தங்கள் மகன் சபரி (3)உடன் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது அரூர் வந்த அவர்கள் தனியார் பேருந்து மூலம் ஆண்டியூர் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

image

அப்போது சிறுவன் சபரியை அரூர் பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பெற்றோரை காணாத சிறுவன், அரூர் பேருந்து நிலையத்தில் அழுது கொண்டே இருந்துள்ளான். இதையடுத்து சிறுவன் அழுவதைக் கண்டவர்கள், பேருந்து நிலையத்தில் இருந்த காவல் துறையினரிடம் சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் தங்களோடு இருப்பதாக நினைத்து, ஆண்டியூர் சென்ற தம்பதியினர் பேருந்தை விட்டு இறங்கும்போது சிறுவன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோரை வரவழைத்த காவல் துறையினர் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பாதுகாத்து, விரைவாக பெற்றோரிடம் ஒப்படைத்த அரூர் காவல் துறையினரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post