சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு மனிதக் குலத்தையே மீளாத் துயரில் ஆழ்த்திவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சுற்றுச் சூழலை காப்பவரின் அடையாளமே "மஞ்சள் பை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மஞ்சள் பை கொண்டு செல்லும் பழைய காலங்களை நினைவு கூர்ந்தார். அதன்பிறகு, மஞ்சள் பை வைத்திருந்தால் அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்கள் உருவானதாகவும், சினிமா, தொலைக்காட்சி தொடர்களிலும் கிராமத்துக்காரரை அடையாளம் காட்ட மஞ்சள் பையை பயன்படுத்தி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த மஞ்சள் பைகள் தான் சுற்றுச்சுசூழலுக்கு சரியானது என்றும், அழகான பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்ட அவர், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு மனித குலத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடும் என எச்சரித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News