
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாராயணம், திருமஞ்சனம், பிரசாதம் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்ட நிலையில், அனைத்து கோவில்களும் திறக்கப்படலாம் என கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பிற்கு முரணாக வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டும் வழக்கமான நடைமுறைகள் அனுமதிக்கப்படவில்லை என சென்னையை சேர்ந்த ஆனந்த தேசிகன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வரதராஜ பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம், திருமஞ்சனம், அர்ச்சனை, பிரசாதம், வேத பாராயணம், சடாரி போன்ற வழக்கமான நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் இந்த வழிபாடுகளுக்கு அனுமதி அளித்து தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்கழி தொடங்கவுள்ளதால் கோவிலின் வழக்கமான நடைமுறைகளை தொடரும்படி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இதனைப்படிக்க...ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபரால் பரபரப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News